தமிழகத்தில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சமூக நல்வாழ்வு அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் ஆளுநருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘முதலமைச்சர் எடுத்துவரும் தொடர் நடவடிக்கை காரணமாக கொரோனா தொற்று பாதிப்பு 7 ஆயிரத்து 427 என்ற அளவுக்கு வேகமாக குறைந்துள்ளது. இன்னும் ஒரு சில நாட்களில் தொற்று முற்று பெறும்.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் களத்தில் இறங்கி ஆய்வு செய்து வருகிறார்.
சமீபத்தில் எழும்பூர் மருத்துவமனையில் ஆய்வு செய்தார். கடந்த ஒன்றரை மாதத்தில் 79 ஆயிரத்து 618 புதிய படுக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன. கொரோனா மூன்றாவது அலை வரக்கூடாது என நினைக்கிறோம். அப்படியே வந்தாலும் அதை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது’ எனத் தெரிவித்தார்.