வீதியால் பயணிப்போரை கருங்குளவிகள் மற்றும் காகங்கள் என்பன துரத்தி தாக்குவதாகவும், அதனால் குறித்த வீதியினால் தாம் செல்ல அச்சம் கொண்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் சாவகச்சேரி – தனங்களப்பு வீதியிலையே இச்சம்பவம் இடம்பெற்று வருகின்றது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது, “குறித்த வீதியினை தென்மராட்சி தெற்கு பிரதேசத்திற்கு செல்லும் மக்களும், சாவகச்சேரியில் இருந்து யாழ்ப்பாணம் – மன்னார் (ஏ -32) பிரதான வீதிக்கு செல்வோரும் பயன்படுத்தி வருகின்றனர்.
வீதி ஓரத்தில் காணப்படும் பனங்கூடல் மற்றும் எருக்கலை பற்றை காடுகளினுள், கருங்குளவிகள் மற்றும் காகங்கள் என்பன கூடு கட்டியுள்ளன.
அவை வீதியில் செல்வோரை துரத்தி துரத்தி தாக்குகின்றன. அதனால் பலர் அச்சம் காரணமாக அந்த வீதியினை பயன்படுத்துவதை தவிர்த்து வருகின்றனர்.
நேற்றைய தினம் கைக்குழந்தையுடன், மோட்டார் சைக்கிளில் பயணித்த தம்பதியினரை காகங்கள் துரத்தி துரத்தி தாக்கியுள்ளன.
அவர்கள் தலைக்கவசம் அணிந்திருமையால் பெரியளவிலான காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, குறித்த வீதியில் மாலை நேரங்களில் சிலர் நடைப்பயிற்சியில் ஈடுபட்டு வந்ததாகவும், தற்போது கருங்குளவிகள், காகங்களின் தாக்குதல் அச்சம் காரணமாக அவர்கள் நடைப்பயிற்சியில் ஈடுபடுவதில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.