சிறுபான்மை மக்களின் போராட்டத்திற்கு தற்போதைய அரசாங்கத்தின் ஊடாக விடிவு கிடைத்துள்ளதென காரைதீவு பிரதேச சபை பிரதி தவிசாளர் ஏ.எம்.ஜாஹீர் தெரிவித்துள்ளார்.
இன்று (சனிக்கிழமை) அம்பாறையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, ‘ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் நல்லெண்ண அடிப்படையில் தமிழ் அரசியல் கைதிகள் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இதனூடாக சிறுபான்மை மக்களின் போராட்டத்திற்கு தற்போது விடிவு கிடைத்துள்ளது. ஆகவே ஜனாதிபதிக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.
அத்துடன், ஏனைய அரசியல் கைதிகளையும் விடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வோம் என அமைச்சர் நாமல் ராஜபக்ஷவும் உறுதியளித்துள்ளார். அதனை நாம் வரவேற்கின்றோம்.
இதேவேளை நல்லாட்சி அரசாங்கத்தில், தமிழ் தேசிய கூட்டமைப்பு அங்கம் வகித்திருந்த போதும்கூட அரசியல் கைதிகள் விவகாரத்தில் எந்ததொரு முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இதனால் அவர்கள் அனைவரையும் முதுகெழும்பு இல்லாத அரசியல்வாதிகளாகவே பார்க்க தோன்றுகின்றது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.






