மத்திய அரசின் செயற்பாடுகளுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒன்றாக இணைந்து குரல் கொடுக்க முன்வரவேண்டுமென தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அழைப்பு விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அனைத்து கட்சிகளுக்கும் இந்த அழைப்பினை விடுத்துள்ளார்.
குறித்த ஊடக அறிக்கையில் கே.எஸ்.அழகிரி மேலும் கூறியுள்ளதாவது, “கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டத்தில் மத்திய அரசு தோல்வியடைந்துள்ளது.
மேலும் ஒட்சிசன், மருத்துவ படுக்கைகள், உயிர் காக்கும் மருந்துகள் தட்டுப்பாடு ஆகியவற்றின் காரணமாக மாத்திரம் ஏறத்தாழ 4 இலட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை தவறான தடுப்பூசி கொள்கை காரணமாக கொரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க மத்திய அரசு முற்றிலும் தவறிவிட்டது.
அத்துடன் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வழங்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த பிரதமர் மோடி, வேலைவாய்ப்பை பெருக்கவோ பொருளாதார பேரழிவைத் தடுக்கவோ எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
இவ்வாறு மக்கள் நலன்களை கருத்திற் கொள்ளாமல் செயற்படும் மத்திய அரசுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து பாடம் புகட்ட வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.