2020ஆம் ஆண்டுக்கான யூரோ கிண்ண கால்பந்து தொடரில் காலிறுதிக்கு தகுதி பெறும் போட்டியில் இத்தாலி அணி வெற்றி பெற்றுள்ளது.
இங்கிலாந்தின் வெம்ப்லி மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் இத்தாலி மற்றும் ஒஸ்திரிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் இரு அணிகளும் ஒதுக்கப்பட்ட நேரத்தில் எவ்வித கோல்களையும் புகுத்த தவறியாமையினால் மேலதிக நேரம் ஒதுக்கப்பட்டது.
அதன்படி இத்தாலி அணி சார்பாக 95 ஆவது நிமிடத்தில் பெடரிகோ சிசா முதலாவது கோலையும் பின்னர் 105 ஆவது நிமிடத்தில் மேட்டியோ பெசினா இரண்டாவது கோலையும் அடிக்க இத்தாலி அணி 2-0 என முன்னிலை வகித்தது.
பின்னர் ஒஸ்திரிய அணி சார்பாக 114 ஆவது நிமிடத்தில் சாசா கலாஜ்ட்ஜிக் ஒரு கோலை புகுத்த இறுதியில் இத்தாலி அணி 2-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்று காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
பெல்ஜியம் மற்றும் போர்த்துக்கல் அணிகளுக்கு இடையில் நாளை இடம்பெறும் போட்டியில் வெற்றிபெறும் அணியுடன் இத்தாலி அணி காலிறுதியில் மோதவுள்ளது.