மத்திய வங்கி பிணை முறி மோசடியில் குற்றம் சாட்டப்பட்ட நிறுவனத்திற்கு மீண்டும் மதுபானம் தயாரிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சாட்டியுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.
நல்லாட்சியின் காலத்தில் இரத்து செய்யப்பட்ட சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் வணிக உரிமம் தற்போதைய அரசாங்கத்தால் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
ஒரு பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான வரி ஏய்ப்பு குற்றச்சாட்டில் ஈடுபட்டமையினால் நல்லாட்சியின் காலத்தில் நிறுவனத்திற்கான உரிமம் இரத்து செய்யப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மத்திய வங்கி மோசடியில் ஈடுபட்ட நபர்களுடன் யார் தொடர்பு கொண்டுள்ளனர் என்பதை இப்போது நாட்டு மக்கள் அனைவரும் அறிந்துள்ளனர் என்றும் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டார்.
அரசுக்கு செலுத்த வேண்டிய வரிப் பணத்தை செலுத்தத் தவறியமையால், 2018 ஆம் ஆண்டு மென்டிஸ் நிறுவனத்தின் மதுபான உற்பத்திக்கான அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.