மத்திய ஜப்பானில் பலத்த மழையைத் தொடர்ந்து அட்டாமி நகரில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவினால் 20 பேரைக் காணவில்லை என அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
உள்ளூர் நேரப்படி 10:30 மணிக்கு இந்த நிலச்சரிவு ஏற்பட்டது. உயிரிழந்த இருவரின் சடலங்கள் துறைமுக மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கியோடோ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அத்துடன் இந்த நிலச்சரிவினால் பல வீடுகள் அழிக்கப்பட்டன அல்லது புதைக்கப்பட்டன.
பேரழிவு மற்றும் பசிபிக் கடலோரப் பகுதியில் கனமழையால் ஏற்பட்ட பரந்த அவசரநிலைக்கு பதிலளிக்க ஒரு பணிக்குழுவை பிரதமர் யோஷிஹைட் சுகா அனுப்பி வைத்துள்ளார்.
தற்போது நிலச்சரிவினுள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகளில், பொலிஸார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஜப்பானின் இராணுவ வீர்ர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
ஜூலை முதல் மூன்று நாட்களில் வழக்கமாக முழு மாதத்திலும் காணப்படுவதை விட அதிக மழை பெய்ததே இந்த நிலச்சரிவுக்கு காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தாழ்வான பகுதிகளில் மேலும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்ற எச்சரிக்கையைத் தொடர்ந்து ஷிஜுவோகா, கனகாவா மற்றும் சிபா ஆகிய மூன்று மாகாணங்களில் வசிப்பவர்கள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜப்பான் அதன் மழைக்காலங்களில் மண் சரிவு மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெள்ளத்தில் டசன் கணக்கானவர்கள் உயிரிழந்தனர், மேலும் 2018இல் மேற்கு ஜப்பானின் சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.