வவுனியா- புதிய சின்னக்குளம் பகுதியில் கற்குவாரியை நிறுத்துமாறு மக்களினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் கைவிடப்பட்டது.
குறித்த பகுதியிலுள்ள குடிமனைகளுக்கு அருகாமையில் அமைந்துள்ள கற்குவாரியை அகற்றுமாறு கோரியே மக்களினால் இந்த போராட்டம் இன்று (சனிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா- புதிய சின்னக்குள பகுதியிலுள்ள சிறிய மலைக்குன்றில் கல்லுடைப்பதால் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுப்பதாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் சுட்டிக்காட்டி இருந்தனர்.
இந்த விடயம் தொடர்பாக மக்கள் மேலும் கூறியுள்ளதாவது, “கற்குவாரியில் கல்லுடைப்பதினால் எங்களது வீடுகளில் வெடிப்புக்கள் ஏற்படுகின்றன.
மேலும் எந்தவித அறிவித்தலும் இன்றி வெடிவைத்து கற்களை உடைக்கும்போது அங்கிருந்து சிதறிவரும் கருங்கல் துண்டுகள் எங்களது வீடுகளின் கூரையில் விழுகின்றன.
அத்துடன் கற்களினை உடைக்க பயன்படும் வெடிமருந்து காரணமாக சுவாச பிரச்சினை ஏற்படுவதுடன் குழந்தைகள் மயக்கமடையும் நிலைமை காணப்படுகின்றது.
சுற்றுவட்டத்தில் இருக்கும் அனைத்து கிராமங்களிற்கும் குறித்த கற்குவாரியால் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
ஆகவே குறித்த கல்குவாரியில் கல் உடைக்கும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தி இருந்தனர்.
இதன்போது சம்பவம் அறிந்து அவ்விடத்திற்கு வருகை தந்த வவுனியா – மாமடு பொலிஸ் அதிகாரி, வெடிபொருட்கள் பயன்படுத்தி கல் உடைப்பதை தற்காலிகமாக நிறுத்துவதாகவும் இந்த விடயம் தொடர்பாக விசாரணையை முன்னெடுப்பதாகவும் மக்களுக்கு வாக்குறுதி அளித்தார்.
அதனைத் தொடர்ந்து மக்கள், ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.