பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரில் உள்ள வணிக வளாகத்தில் இடம்பெற்ற தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 73ஆக அதிகரித்துள்ளதாகவும் , இதுவரை 23 சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 17ஆம் திகதி இரவு எம்.ஏ. ஜின்னா வீதியில் உள்ள வணிக வளாகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
அவ்வளாகத்தில் உள்ள கட்டடத்தில் உள்ள ஒரு கடையில் ஏற்பட்ட மின்கசிவினால் தீ பரவியதாகவும் கட்டடத்தின் மூன்று தளங்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மொத்த விற்பனை நிலையங்கள், சில்லறை விற்பனைக் கடைகள் உட்பட கட்டடத்தின் பெரும்பகுதியில் பாரிய தீ பரவி, பெரும் பொருட்சேதங்களையும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் மீட்புக் குழுவினர் கட்டடத்தில் சிக்கியுள்ள உடல்களையும் பாதிக்கப்பட்டவர்களையும் மீட்டு வரும் நிலையில், இதுவரை 73 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்துவதற்காக டி.என்.ஏ பரிசோதனையும் நடத்தப்படும் நிலையில் நேற்று, இப்பரிசோதனை மூலம் 16 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அதன்படி, இதுவரை 23 சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.















