கிளிநொச்சி- இராமநாதபுரம், அழகாபுரி பகுதிக்குள் நுழையும் காட்டு யானைகளின் அட்டகாசம் காரணமாக எந்நாளும் பேரவலத்தை சந்திக்க நேரிட்டுள்ளதாக அப்பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
குறிப்பாக இரவு வேளைகளில் மக்கள் குடியிருப்பு பகுதிக்குள் வரும் காட்டு யானைகள், பயன்தரக்கூடிய பல்வேறு வகையான பயிர்களை அளித்து வருவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும் இவ்விடயம் தொடர்பாக வனஜீவராசிகள் திணைக்களம், கிராம சேவையாளர், கிளிநொச்சி பிரதேச செயலகம் ஆகியவற்றுக்கு பலமுறை முறைப்பாடு தெரிவித்தும் அவர்கள் எந்ததொரு நடவடிக்கையையும் இதுவரை மேற்கொள்ளவில்லை என அப்பிரதேச மக்கள் குற்றம் சுமத்தினர்.
இதேவேளை மின்சார வேலி அமைத்து தருவதாகவும் வீட்டினை பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாகவும் அரசியல்வாதிகள் வாக்குறுதி வழங்கினர். ஆனால் அவர்களின் வாக்குறுதியும் பொய்யாகி போயுள்ளது எனவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
மேலும் யானை அச்சுறுத்தல் காரணமாக இரவு வேளைகளில் எந்நாளும் கண்விழித்து இருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதுடன் கூலி வேலை செய்தே அன்றாட ஜீவனேபாயத்தினையும் நாம் மேற்கொள்கின்றோம் எனவும் மக்கள் சுட்டிக்காட்டினர்.
ஆகவே, ஏனைய மக்களைப் போன்று நாமும் வாழ்வதற்கு இவ்விடயத்தில் உரிய தீர்வை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வழங்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.