சுமார் மூன்று மாதங்களுக்கு பிறகு எவர்கிவன் சரக்கு கப்பலை, சூயஸ் கால்வாய் ஆணையம் விடுவித்துள்ளது.
இதையடுத்து எவர்கிவன் சரக்கு கப்பல், நேற்று (புதன்கிழமை) நெதர்லாந்து நோக்கிய தனது பயணத்தை மீண்டும் தொடங்கியுள்ளது.
சர்வதேச அளவில் உலகின் மிக முக்கிய கப்பல் போக்குவரத்து வழித்தடமாக விளங்கும் சூயஸ் கால்வாயில், கடந்த மார்ச் மாதம் எவர்கிவன் சரக்கு கப்பல் குறுக்கு பக்கமாக தரை தட்டி நின்றது.
இதன் காரணமாக சர்வதேச சரக்கு கப்பல் போக்குவரத்து தடைப்பட்டு, உலக வர்த்தகத்தில் பாதிப்பு ஏற்பட்டது. கிட்டத்தட்ட ஒரு வார கால முயற்சிக்கு பிறகு எவர்கிவன் கப்பல் மீண்டும் மிதக்கும் நிலைக்கு கொண்டுவரப்பட்டது.
இருப்பினும் கப்பல் தரை தட்டி நின்ற காரணத்தினால் தங்களுக்கு ஏற்பட்ட இழப்பீட்டை வழங்கும் வரை கப்பலை விடமாட்டோம் என எவர்கிவன் கப்பலின் உரிமையாளரான ஜப்பானை சேர்ந்த ஷோய் கிசென் கைஷாவிடம் சூயஸ் கால்வாய் ஆணையம் தெரிவித்தது.
அதற்காக எவர்கிவன் கப்பலை சூயஸ் கால்வாய் அருகே உள்ள ஒரு ஏரியில் பிணையாக பிடித்து வைக்கப்பட்டது. சுமார் 916 மில்லியன் அமெரிக்க டொலர்களை இழப்பீடாக சூயஸ் கால்வாய் ஆணையம் கேட்டது. எனினும் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு இழப்பீட்டு தொகையை 550 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை சூயஸ் கால்வாய் ஆணையம் குறைத்து கொண்டது.
இந்த நிலையில் சூயஸ் கால்வாய் ஆணையம் கேட்ட இழப்பீட்டு தொகையை வழங்க எவர்கிவன் கப்பலின் உரிமையாளர் ஷோய் கிசென் கைஷா ஒப்பு கொண்டார். இது தொடர்பான ஒப்பந்தத்திலும் அவர் கையெழுத்திட்டார். இதனை தொடர்ந்து, கப்பல் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளது.