குடல் அறுவை சிகிச்சைக்குப்பின் போப் ஆண்டவர் பிரான்சிஸ், குணமடைந்து வருவதாக வத்திகான் செய்தி தொடர்பாளர் மாத்தியோ புரூனி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ‘குடல் அறுவை சிகிச்சைக்குப்பின் போப் பிரான்சிஸ் குணமடைந்து வருகிறார். அவரது உடல் நலம் வழக்கமான முறையிலும் மற்றும் திருப்திகரமாகவும் உள்ளது. அவர் உணவு எடுத்துக்கொள்கிறார்.
ஏராளமானோர் தனக்காக பிரார்த்தனை செய்வதுடன், வாழ்த்தும் தெரிவித்து வருவது கண்டு போப் ஆண்டவர் நெகிழ்ந்து போயுள்ளார். அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து உள்ளார்’ என கூறினார்.
குடல் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்த 84வயதான போப் ஆண்டவர் பிரான்சிஸ், கடந்த 4ஆம் திகதி இத்தாலியின் ரோமில் உள்ள கெமல்லி மருத்துவமனையில் குடல் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
மூன்று மணித்தியாலங்கள் நடந்த அறுவை சிகிச்சையில், அவரது பெருங்குடலின் இடதுபாகம் அகற்றப்பட்டது. தற்போது அவர் உடல் நலம் தேறி வருகின்றார்.