ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்களை ஒடுக்கும் செயற்பாடானது, அடிப்படை உரிமை மீறலாகும் என நாடாளுமன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) எதிர்க்கட்சியினர் தெரிவித்தனர்.
மேலும், கொழும்பில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து அவர்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ளமையானது, தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு எதிரான செயற்பாடு என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
சேர் ஜோன் கொத்தலாவ தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்டமூலத்தை உடனடியாக மீள பெறுமாறு வலியுறுத்தி, நேற்று பத்தரமுல்லை, நாடாளுமன்ற சுற்றுவட்டத்திற்கு முன்பாக பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் அமைப்பினர், பொது மக்கள் என பலரும் இதில் கலந்து கொண்டு குறித்த சட்டமூலத்தை அரசாங்கம் வாபஸ் பெறவேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எனினும், இந்தப் போராட்டமானது தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுவதாகக் குற்றஞ்சாட்டி, ஆர்ப்பாட்டக்காரர்களை பொலிஸார் கைது செய்ய முற்பட்டபோது அங்கு பெரும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
இதனால், ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்த பௌத்த பிக்குகள், பெண்கள், முதாதையர் மற்றும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட 31 பேரை பொலிஸார் கைது செய்தனர்.
இவர்கள் கொழும்பு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, இவர்கள் அனைவருக்கும் பினை வழங்கப்பட்டது.
எனினும், குறித்த நபர்கள் அனைவரும் பொலிஸாரினால் நேற்று தனிமைப்படுத்தலுக்காக முல்லைத்தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இதனால் நேற்றைய தினம் நீதிமன்றுக்கு முன்பாக பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளதோடு, பொலிஸாரின் இந்தச் செய்றபாடானது சமகால அரசியலிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.