ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்டோரின் உத்தரவின் பேரிலா, பொலிஸார் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி செயற்படுகின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற நாடாளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அநுரகுமார திஸாநாயக்க மேலும் கூறியுள்ளதாவது, “போராட்டங்களில் ஈடுபடுவதால், கொரோனா பரவும் விகிதம் அதிகரிப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஆனால், இலங்கையைப் பொருத்தமட்டில் பேரூந்துகளில் இன்னும் கூட்டமாகத்தான் பொது மக்கள் செல்கிறார்கள்.
நேற்று அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு நகரங்களில் மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டதையும் நாம் கண்டோம்.
இந்த நிலையில், போராட்டங்களை மட்டும் அரசாங்கம் கொரோனாவைக் காரணம் காட்டி தடுப்பதானது அடிப்படை உரிமை மீறலாகவே கருதப்படுகிறது.
நேற்றைய தினம் போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள், கொழும்பு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, பொலிஸார் இவர்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த அனுமதிக்குமாறு நீதிமன்றைக் கோரியுள்ளார்கள்.
எனினும் நீதிமன்றம், அதற்கு அனுமதிக்காத நிலையிலேயே பொலிஸார் கைது செய்யப்பட்ட சுமார் 33 பேரையும் முல்லைத்தீவுக்கு தனிமைப்படுத்தலுக்காக கொண்டு சென்றுள்ளார்கள்.
தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு இணங்க, இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்ள பொலிஸாருக்கு எந்வொரு அதிகாரமும் இல்லாத நிலையில், யாருடைய அறிவித்தலின் கீழ் பொலிஸார் இவ்வாறு செயற்பட்டார்கள்?
ஜனாதிபதி, பிரதமர், அல்லது பொலிஸ்மா அதிபரின் உத்தரவின்பேரிலா இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.