இலங்கை ஜனநாயக நாடு என்பதனை அரசாங்கம் தற்போது கேள்விக்குறியாக்கியுள்ளது என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, ஜனநாயக ரீதியிலான வன்முறையற்ற போராட்டங்களை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாமை அல்லது அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கின்றமை ஆகியவை இலங்கை ஜனநாயக நாடு என்பதனை கேள்விக்குறியாக்கியுள்ளது.
மேலும் எதிர்கால நலன்களை கருத்தில் கொள்ளாது கல்விக்கொள்கை உள்ளிட்ட முக்கிய விடயங்களில் தான்றோறித்தனமாக அரசாங்கம் சில முடிவுகளை எடுக்கின்றமை ஜனநாயக விரோத செயற்பாடாகும்.
அதாவது தற்போது ஏற்படுத்தப்படவுள்ள சட்டமூலங்கள் ஒட்டுமொத்த நாட்டின் கல்விக்கொள்கைகளை கேள்விக்குறியாக்கியுள்ளது.
இதனை ஒரு சமூகமன்றி பல தரப்பினரும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகவேதான் ஜனநாயக ரீதியிலான போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
மேலும் மாணவர்கள் இழந்துபோன கல்வியை மீட்டெடுக்க அதிபர்கள், ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் செய்கின்ற பணிகளைக்கூட அரசு மதிப்பதாக தெரியவில்லை.
அத்துடன் அரசாங்கம், ஜனநாயக வழிமுறைகளுக்கு மதிப்பளித்து, அனைத்துச் சமூகமும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் தீர்மானங்களை எடுக்கவேண்டும்.
இல்லையேல் ஒரு தரப்பினரால் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் ஒட்டுமொத்த நாட்டு மக்களினாலும் விரைவில் முன்னெடுக்கப்படும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.