ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க மற்றும் நேட்டோ படைகளின் உயர் தளபதி ஜெனரல் ஆஸ்டின் ஸ்கொட் மில்லர், தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.
அவர் பதவியில் இருந்து விலகி, அவரது பொறுப்புக்களை பிராந்தியக் கட்டுப்பாடுகளை நிர்வகிக்கும் கீழ்நிலை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார்.
நேற்று (திங்கட்கிழமை) நடந்த எளிமையான நிகழ்ச்சி ஒன்றில் தன்னுடைய பொறுப்புகளை இரு அமெரிக்க ஜெனரல்களிடம் ஒப்படைத்தார்.
அவர்களில் ஒருவர் புளோரிடாவில் இருந்தபடி வெளிநாட்டில் அமெரிக்கப் படைகளை வழிநடத்துபவர். மற்றொருவர் படை விலக்கலுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானில் இருக்கப்போகும் சுமார் 650 வீரர்களுக்கு தளபதியாக இருப்பவர்.
எதிர்வரும் ஒகஸ்ட் 31ஆம் திகதியுடன் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் தங்களது நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ளும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ள நிலையில், அதன் ஒருபகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் ‘செப்டம்பர் 11’ தாக்குதல் உள்ளிட்ட தாக்குதல்களுடன் தொடர்புடைய ஒசாமா பின் லேடன், அல் கொய்தாவைச் சேர்ந்தவர்களுடன் தலிபான்கள் சேர்ந்து செயற்பட்டதால் ஆப்கானிஸ்தானில் ஆக்கிரமிப்பு செய்து புதிய ஆளுகையை அமெரிக்கா நிறுவியது.
ஆஃப்கானிஸ்தானில் ஆட்சியில் இருந்த தலிபான்களை 2001ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படை அகற்றியது.
முன்னதாக, தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் அல் கொய்தா அல்லது வேறு தீவிரவாத குழுக்கள் நுழைய அனுமதிக்க மாட்டோம் என்று தலிபான் இயக்கத்தினர் அளித்த உறுதிமொழயின்பேரில், ஆஃப்கானிஸ்தானில் முகாமிட்டிருந்த அமெரிக்கா, நேட்டோ கூட்டுப்படை அங்கிருந்து வெளியேற கடந்த ஆண்டு ஒப்புக் கொண்டன.
ஆஃப்கானிஸ்தானில் செப்டம்பர் மாதத்துக்குள் எஞ்சிய வெளிநாட்டு படையினர் விலக்கிக் கொள்ளப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பிரித்தானியா உள்ளிட்ட பிற நேட்டோ நாடுகளின் படைகளும் பைடன் விதித்த காலக்கெடுவுக்கு முன்னரே தங்களது படைகளை திரும்பப் பெற்றுவிட்டன.
இதனால், தலிபான் ஆயுதமேந்திய தீவிரவாதிகளுக்கு எதிரான சண்டையில் இதுநாள்வரை வெளிநாட்டு துருப்புகளின் உதவியுடன் போரிட்டு வந்த ஆஃப்கான் படையினர் பலவீனம் அடையலாம் என்ற கவலை அதிகரித்துள்ளது.
எனினும், ஆஃப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினர், தீவிரவாதிகளை எதிர்கொள்ள முழு திறன் பெற்றுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி அஷ்ரஃப் கானி வலியுறுத்தி வருகிறார்.
இதனிடையே, மேற்கத்திய நாடுகளின் படைகள் வெளியேறியிருக்கும் நிலையில், ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளில் தலிபான்கள் முன்னேறி வருகின்றனர். அத்துடன் ஆப்கானிஸ்தான் நாட்டின் 85 சதவீதப் பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துவிட்டதாக, தலிபான்கள் அறிவித்துள்ளனர்.