கிரிக்கெட் இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த ரி-20 உலகக்கிண்ண தொடரில், எந்தெந்த அணிகள் எந்தக் குழுக்களில் இடம்பெற்றுள்ளன என்பதை தெளிவுப்படுத்தும் குழு விபரங்களை சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி.) வெளியிட்டுள்ளது.
குழு ஒன்றில் நடப்பு சம்பியன் மேற்கிந்திய தீவுகள், இங்கிலாந்து, அவுஸ்ரேலியா, தென்னாபிரிக்கா மற்றும் தகுதி சுற்றுப் போட்டிகளில் தேர்வாகும் இரு அணிகள்.
குழு இரண்டில் இந்தியா, பாகிஸ்தான், நியூஸிலாந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் தகுதி சுற்றுப் போட்டிகளில் தேர்வாகும் இரு அணிகள். இந்தச் சுற்றுக்கு சுப்பர்-12 எனப் பெயரிடப்பட்டுள்ளது.
தகுதிச்சுற்று போட்டிகள் முதல் சுற்று போட்டிகளாக அழைக்கப்படுகின்றன. அவற்றில் குழு ஏ பிரிவில் இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, நமிபியா ஆகிய அணிகளும் குழு பி பிரிவில் பங்களாதேஷ், ஸ்கொட்லாந்து, ஓமன், பப்புவா நியூ கினியா ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.
ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் இரு அணிகள் சுப்பர் 12 சுற்றில் இதர எட்டு அணிகளுடன் சேர்ந்துவிடும். முதல் சுற்றுப் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்திலும் ஓமனிலும் நடைபெறும்.
இந்தியாவில் நடத்தப்படவிருந்த ரி-20 உலகக்கிண்ண தொடர், கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறுகிறது. இந்த தொடர், இந்தியாவில் நடைபெறாவிட்டாலும் இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் சார்பாகவே நடைபெறுகின்றது.
டுபாய், அபு தாபி, ஷார்ஜா, ஓமன் என நான்கு இடங்களில் ரி-20 உலகக்கிண்ண தொடரின் போட்டிகள் நடைபெறுகின்றன.