மட்டக்களப்பில் டெங்கு கட்டுப்பாட்டு உத்தியோகத்தர்களாக இணைத்துக்கொள்ளப்பட்டவர்கள் தமக்கான நிரந்தர நியமனத்தினை வழங்கக் கோரி இன்று (செவ்வாய்க்கிழமை) போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.
குறித்த ஆர்ப்பாட்டம் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டிருந்தது.
கடந்த நான்கரை ஆண்டுகளாக கடமையாற்றுகின்றபோதும் தமக்கு இதுவரை நியமனம் வழங்கப்படவில்லையெனவும் தமக்கு நிரந்தர நியமனம் வழங்க ஜனாதிபதி, பிரதமர் நடவடிக்கையெடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் சுகாதார நடைமுறைகளைப் பேணிய வகையில் தமது போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
அரசே கள நுளம்பு ஒழிப்பு உதவியாளர்களை சுகாதார திணைக்களத்திற்குள் உள்வாங்கு, அரசே வேலையினை நிரந்தரமாக்கு, மாகாண சபைக்குள் உள்வாங்கி 180 நாள் வேலைத்திட்டத்தில் எங்களை நிரந்தரமாக்கு போன்ற சுலோகங்களை தாங்கியவாறு இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.