ஒக்சிஜன் தட்டுப்பாட்டால் எந்த மாநிலத்திலும், யூனியன் பிரதேசத்திலும் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றின் இரண்டாவது அலையில் அதிகளவான உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஒக்சிஜன் தட்டுப்பாடு காரணமாகவே மேற்படி உயிரிழப்புகள் ஏற்பட்டதாக கூறப்பட்டது.
இது குறித்து ராஜ்யசபாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் பாரதி பிரவீன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், ‘தினமும் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோர் மற்றும் உயிரிழப்போரின் விபரங்களை மத்திய அரசிடம் மாநில அரசுகள் அறிக்கையாக சமர்ப்பித்து வருகின்றன.
பலி விபரங்களை சமர்ப்பிக்கும் வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன. அந்த விபரங்களை பார்க்கும்போது ஒக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்பது தெரிகிறது’ எனக் கூறியுள்ளார்.