மாகாண பாடசாலைகளை மத்திய அரசின் ஆளுகைக்குட்படுத்துவதற்கு எதிராக வெகுவிரைவில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக தமிழ் மக்கள் தேசிய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “தற்போதுள்ள அரசானது மாகாணங்களுக்கே உரித்தான கல்வி சுகாதார போன்ற விடயங்களை மாகாணங்களுக்கான அதிகாரங்களை தன் வசப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. அதற்கு சிலர் துணை போகிறார்கள். சில மாயைகளை நம்பி சிலர் மாகாண அதிகாரத்தை மத்திக்கு தாரை வார்க்கும் முகமாக செயற்படுகின்றார்கள்.
ஆனால் தற்போதுள்ள அரசானது 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு உட்பட்ட கல்வி சுகாதாரம் போன்ற விடயங்களை தனது ஆளுகைக்கு உட்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றமை தொடர்பில் நாம் நேற்று கல்வியலாளர்களுடன் ஒரு சந்திப்பினை மேற்கொண்ட அந்த சந்திப்பில் ஒரு தீர்மானத்தை எடுத்துள்ளோம்.
அதாவது இந்த மாகாணத்திற்குட்பட்ட பாடசாலை மற்றும் வைத்தியசாலைகளை மத்தி தனது ஆளுகைக்குட்படுத்தப்படுவதற்கு எதிராக வெகுவிரைவில் வழக்கு ஒன்றினைத் தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளோம்.“ எனத் தெரிவித்துள்ளார்.