சிறுமி ஹிஷாலினியின் மரணத்துக்கு நீதி கோரி பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் வவுனியாவிலும் சிறுமியின் மரணத்துக்கு நீதி வேண்டி கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று (திங்கட்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா மாவட்ட உள்ளூராட்சி மன்ற பெண்கள் ஒன்றியம் மற்றும் சிவில் சமூக அமைப்பின் ஏற்பாட்டில், வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், “பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன.
அத்துடன் எரிக்காயங்களுடன் உயிரிழந்துள்ள சிறுமி ஹிஷாலியின் மரணத்திற்கு காரணமானவரகள், உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களுக்கு உரிய தண்டனைகள் வழங்கப்படவேண்டும்.
குறித்த சிறுமியின் மரணத்துக்கு நியாயம் கிடைக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்” என வலியுறுத்தியுள்ளனர்.
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் இல்லத்திற்கு கடந்த 2020ஆம் ஆண்டு பணிக்குச் சென்ற 16 வயதுடைய சிறுமி, இம்மாதம் 3ஆம் திகதி தீக்காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 15ஆம் திகதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்திருந்தார்.
அதனைத்தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் குறித்த சிறுமி நீண்டகாலமாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டிருந்தமை குறித்து தெரியவந்தமை குறிப்பிடத்தக்கது.