மன்னாரில் இதுவரை 52 ஆயிரத்து 144 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.
இதில் 46ஆயிரத்து 440 பேருக்கு பைசர் தடுப்பூசியின் முதலாவது தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே வைத்தியர் ரி.வினோதன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறியுள்ளதாவது, “மன்னாரில் பல்கலைக்கழக மற்றும் கல்வியல் கல்லூரி மற்றும் உயர் கல்வி நிறுவனங்களில் கல்வி கற்கின்ற மாணவர்களுக்கு முதலாவது தடுப்பூசி ‘பைசல்’ வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி மாவட்டத்தில் 30 வயதிற்கு மேற்பட்ட 68 சதவீதமானவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
அவர்களுக்கான 2ஆம் கட்ட தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை எதிர்வரும் 5 ஆம் திகதி இடம்பெற இருக்கின்றது.
மேலும் மக்கள் தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டாலும் தொடர்ந்தும் சுகாதார விதிமுறைகளை உரிய முறையில் கடைபிடிக்க வேண்டும்.
இந்த தடுப்பூசியை செலுத்துவதன் ஊடாக பாரதூரமான கொரோனா தொற்று ஏற்படுவதை தவிர்க்க முடியும்.
ஆனாலும் தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே இதனை புரிந்து கொண்டு தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டாலும் கூட சுகாதார நடைமுறைகளை மக்கள் இறுக்கமாக பின்பற்ற வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.