மன்னார் மடு திருத்தலத்திற்கான பாதயாத்திரையை மேற்கொள்வோர் இன்று (புதன்கிழமை) முல்லைத்தீவு மல்லாவியை அடைந்தனர்.
வடமராட்சி கிழக்கு கப்பலேந்தி மாதா ஆலயத்தில் இருந்து நேற்று அதிகாலை 3:00 மணிக்கு ஒரு தொகுதி யாத்திரிகர்கள் மடுவிற்கு புறப்பட்டுள்ளனர்.
இவர்கள் ஏ9 வீதி வழியாக முறிகண்டியில் இருந்து கொக்காவில் வீதி வழியாக ஐயன்கன் குளம் வரை சென்று அங்கு இரவு தங்கியிருந்தனர்.
இன்று காலை இவர்கள் ஐயன்கன்குளத்தில் இருந்து மல்லாவி வழியாக நட்டாங்கண்டலைச் சென்றடைந்து, நாளை புனித மடு திருத்தலத்தை சென்றடையவுள்ளனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தலில் இருந்து நாடு விடுபடவும் நாட்டு மக்கள் அனைவரும் சுபீட்சமாக வாழவும் குறித்த பாத யாத்திரை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யாழ். வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கப்பலேந்தி மாதா ஆலயத்தில் இருந்து வருடாந்தம் மடுத்திருத்தலத்தின் பாதயாத்திரையில் கலந்துகொள்ளும் பக்தர்கள், ஆடிமாதம் 02ம் திகதி நடைபெறும் உற்சவத்தில் கலந்துகொள்வர்.
எனினும் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இவ்வாண்டு ஆடி மாதத்தில் நடைபெற்ற உற்சவத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே ஒரு தொகுதி யாத்திரிகர்கள் மட்டும் இவ்வாறு பாதயாத்திரையை மேற்கொண்டுள்ளனர்.
இதேவேளை, மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா திருப்பலியில் இம்முறை மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான மக்கள் மாத்திரம் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள் எனவும் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு அனுமதி இல்லை எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணித் திருவிழா தொடர்பாகவும் ஆயத்த நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆராயும் கூட்டம் நேற்று மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் அரசாங்க அதிபர் திருமதி.ஏ.ஸ்ரான்லி டி மெல் தலைமையில் இடம்பெற்றது. இதன்போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்படத்தக்கது.