பிரித்தானியாவின் மற்ற பகுதிகளுக்கு ஏற்ப சில பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து பரிசீலிக்க வடக்கு அயர்லாந்து நிர்வாகிகள் கூடவுள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியத்திலோ அல்லது அமெரிக்காவிலோ முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்கள் திங்கட்கிழமை முதல், பிரித்தானியாவுக்குள் வரும்போது தனிமைப்படுத்தத் தேவையில்லை.
முன்னதாக இது பிரித்தானிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் இரு தடுப்பூசி அளவுகளையும் கொண்டிருந்த வருகையாளர்களுக்கு பொருந்தும். பிரான்சிலிருந்து வந்தவர்களை தவிர.
இதேவேளை பாடசாலைகளில் முகக்கவசம் அணிவது தொடர்பான பிரச்சினையும் நிர்வாகியின் நிகழ்ச்சி நிரலில் இருக்கும்.
கோடைக்கால இடைவெளிக்குப் பிறகு பாடசாலைகளுக்கு திரும்பும்போது மாணவர்கள் முகக்கவசம் அணியத் தேவையில்லை என்பது குறித்து சுகாதார மற்றும் கல்வித் துறைகளின் அதிகாரிகள் கலந்துரையாடியுள்ளனர்.
வடக்கு அயர்லாந்தின் மருத்துவமனைகளில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் அழுத்தங்களின் பின்னணியில் எல்லைகள் மற்றும் பாடசாலைகளில் கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான திட்டங்கள் விவாதிக்கப்பட உள்ளன.
இதனிடையே, கொவிட்-19 நோயாளிகளை கவனிக்கும் ஊழியர்களின் எண்ணிக்கையை விரிவுபடுத்துவதற்காக பெல்ஃபாஸ்டில் சில புற்றுநோய் அறுவை சிகிச்சைகள் இரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.