இஸ்ரேலில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மூன்றாவது டோஸ் கொவிட் தடுப்பூசி செலுத்தப்படும் என பிரதமர் நாஃப்டாலி பென்னட் அறிவித்துள்ளார்.
இதன்மூலம் உலக நாடுகளில் பொதுமக்களுக்கு மூன்றாவது டோஸ் கொவிட் தடுப்பூசி செலுத்தப்படும் என முதல் நாடாக இஸ்ரேல் மாறியுள்ளது.
இதுகுறித்து பிரதமர் நாஃப்டாலி பென்னட் கூறுகையில், ‘தடுப்பூசிகள் பாதுகாப்பானவை என நிரூபிக்கப்பட்டுள்ளன. தீவிர பாதிப்பு மற்றும் உயிரிழப்பிலிருந்து தடுப்பூசிகள் பாதுகாக்கின்றன என்பதும் நிரூபணமாகியுள்ளது.
அவ்வப்போது புதுப்பிக்க வேண்டிய காய்ச்சல் தடுப்பூசிகளைப் போல, கொரோனா தடுப்பூசிகளும் புதுப்பிக்கப்பட வேண்டும். அதன்படி, நாட்டில் ஏற்கெனவே இரு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும்.
நாட்டின் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் முதல் நபராக இன்று மூன்றாவது டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொள்வார். பொதுமக்களுக்கு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் மூன்றாவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும்’ என கூறினார்.
மூன்றாவது டோஸ் தடுப்பூசிக்கு அமெரிக்காவோ, ஐரோப்பிய ஒன்றியமோ இதுவரை அனுமதி வழங்கவில்லை. மூன்றாவது டோஸ் உதவி செய்யும் என்று இன்னும் நிரூபிக்கப்படவில்லை.