வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை இன்று (திங்கட்கிழமை) முன்னெடுத்தனர்.
தங்களுக்கு வழங்கப்பட்ட நியமன கடிதத்திற்கு ஏற்ப தமது பணிகளை பொறுப்பேற்க அனுமதிக்குமாறு வலியுறுத்தியே வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்துக்கு முன்னால் குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தை அவர்கள் முன்னெடுத்திருந்தனர்.
இதற்கு முன்னரும் சுகாதார தொண்டர்கள், தொடர்ச்சியாக கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தப்போது, யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.
குறித்த சந்திப்பினை தொடர்ந்து சுகாதார தொண்டர்கள், ஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்குள் உள் வாங்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டதையடுத்து குறித்த போராட்டம் கைவிடப்பட்டது.
இந்நிலையில் அவர்களுக்குரிய வேலை வாய்ப்பு தொடர்பாக இதுவரை எந்ததொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாதன் காரணமாக சுகாதார தொண்டர்கள் மீண்டும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.