உயர்கல்வியினை இராணுவமயமாக்குவதனை கடுமையாக எதிர்ப்பதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகம் தெரிவித்துள்ளது.
கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகத்தால் இன்று (புதன்கிழமை) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இதனையடுத்து அவர்கள் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகம் இவ்வாறு தெரிவித்துள்ளது.
குறித்த அறிக்கை வருமாறு…
உயர்கல்வியினை இராணுவமயமாக்குவதனையும் தனியார்மயமாக்குவதனையும் எதிர்ப்போம்
ஜனநாயகம் மிக்க சமூகத்தினைக் கட்டியெழுப்புவோம், உயர்கல்வியினை இராணுவமயமாக்கும், தனியார்மயமாக்கும் வகையிலும் அரசினால் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் கொத்தலாவல தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்ட மூலம் மற்றும் பல்கலைக்கழகச் சட்டத்தில் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டிருக்கும் திருத்தம் ஆகியவற்றினை யாழ்ப்பாணப் பலகலைக்கழகத்தின் ஆசிரியர் சங்கம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஊழியர் சங்கம் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் உள்ளடங்கலாக, ஒட்டுமொத்த யாழ்ப் பல்கலைக்கழக சமூகமும் கடுமையாக எதிர்க்கின்றது.
இவ்வாறான சட்டங்கள் உருவாகுவதனை எதிர்ப்பது கல்வியினை இராணுவமயமாக்குவதற்கும் தனியார்மயமாக்குவதற்கும் எதிரான ஜனநாயகத் தரப்புக்களின் வரலாற்றுக் கடமை என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகம் நம்புகின்றது.
எமது நாட்டின் இலவசக் கல்வித்துறை கூடுதல் ஜனநாயகத் தன்மை பெறுவதனை நாம் விரும்புவோமாயின், எமது பல்கலைக்கழகங்களிலும், பாடசாலைகளிலும் இடம்பெறும் அரசியற் தலையீடுகளையும் அரசியல் மயமாக்கப்பட்ட நியமனங்களையும் நாம் எதிர்க்க வேண்டும்.
இராணுவமயமாக்கல் யாழ்ப் பல்கலைக்கழக சமூகத்துக்கோ, வடபுல சமூகத்துக்கோ ஒரு புதிய விடயம் அல்ல. போர்க் காலத்திலும், அதற்குப் பின்னும் இராணுவமயப்படுத்தப்பட்ட கட்டமைப்புக்களுக்கு மத்தியிலேயே வடபுல மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
எமது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் செயன்முறைகள் ஏற்கனவே இராணுவமயப்பட்டிருக்கின்றமையினை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பதவிநீக்கப்பட்டமையும், முன்னாள் சட்டத்துறைத் தலைவர் பதவி விலகுவதற்கு தள்ளப்பட்டமையும் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன.
இதனை விட பல்கலைக்கழக வளாகத்தில் நினைவேந்தற் செயன்முறைகளில் எமது பல்கலைக்கழக சமூகத்தினர் பங்கேற்பதற்கு இராணுவத்தினரால் விடுக்கப்படும் அச்சுறுத்தல்களும், அவர்கள் பிரயோகித்த வன்முறைகளையும் நாம் இன்று நினைவுபடுத்துகின்றோம்.
ஆனால் இன்று இராணுவமயமாக்கமானது இலங்கையின் ஒட்டுமொத்த உயர்கல்வித் துறையினையும் மோசமாகப் பாதிக்கும் ஒரு விடயமாக கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்டமூலத்தின் வாயிலாக உருவெடுத்துள்ளது.
போரின் முடிவின் பல வருடங்களின் பின் தென்னிலங்கையிலே இராணுவமயமாக்கத்துக்கு எதிரான குரல்கள் இப்போது பலமாக ஒலிக்க ஆரம்பித்துள்ளன.
இந்தக் குரல்கள் மேலும் பலம் மிக்கனவாக மாறி அனைத்து சமூகங்களையும் ஒரே மாதிரியும், வெவ்வேறு வகைகளிலும் பாதிக்கும் எல்லா இராணுவமய செயன்முறைகளை எதிர்ப்பனவாக பரிணமிக்க வேண்டும் எனவும், எல்லா சமூகங்களையும் சேர்ந்த மக்களினதும், அமைப்புக்களினதும் கூட்டணியாக அவை மாற வேண்டும் எனவும் யாழ்ப் பல்கலைக்கழக சமூகம் வலியுறுத்துகிறது.
இன்றைய போராட்டம் இலவசக் கல்வி முறையினைப் பாதுகாப்பதற்கும், கல்வியில் தனியார்மயமாக்கலினை எதிர்ப்பதற்குமான ஒரு போராட்டமும் ஆகும்.
இலவசக் கல்வியின் பயன்கள் ஒட்டுமொத்த சமூகத்தினையும் சென்றடைவதற்கு, அரச செலவுகளைத் தீர்மானிக்கையில், கல்விக்கான ஒதுக்கீடு அதிகரிக்கப்படல் வேண்டும் என நாம் இன்று கோருகின்றோம்.
உட்கட்டுமாண வசதிகளும், மனித வளங்களும் அதிகரிக்கப்பட்டு, ஏற்கனவே இருக்கும் இலவசக் கல்விச் சூழல் மேலும் விரிவாக்கப்பட்டு, ஜனநாயகமயப்பட வேண்டும்.
கல்விச் சாலைகளிலே பணிபுரியும் யாவரும் ஏற்றத்தாழ்வுகள் அற்ற வகையில் தமது சேவைகளை வழங்குவதற்கான வெளிகள், சுதந்திரம் என்பன இருப்பதனை நாம் உறுதி செய்ய வேண்டும்.
மாணவர்கள் கேள்விகளைக் கேட்டு, விமர்சனபாங்கான முறையில் தமது அறிவுசார் செயன்முறைகளில் ஈடுபடக் கூடிய ஏற்றத்தாழ்வுகள் அற்ற ஆசிரிய மாணவ உறவுகள் உருவாக வேண்டும்.
இன்று நாம் முன்னெடுக்கும் இந்தப் போராட்டம் ஒரு ஜனநாயகபூர்வமான பல்கலைக்கழகச் சூழலினைக் கட்டியெழுப்புவதன் முக்கியத்துவத்தினையும் வலியுறுத்துகிறது.
நாட்டின் பாடசாலைமட்டக் கல்வித் துறையும் இன்று பாரிய நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளது. கொரொணாத் தொற்றுக் காலத்திலே பல்கலைக்கழக மாணவர்களும், பாடசாலை மாணவர்களும் கல்வியினை இணையவழியிலே தொடரலாம் என்று அறிவுறுத்திய அரசாங்கம், இணையவழிக் கல்வியினால் கல்வித் துறையில் ஏற்பட்டிருக்கும் அசமத்துவங்களை நீக்க ஆக்கபூர்வமான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை.
இணையவசதி அற்ற இடங்களிலும் இருந்து கல்வி கற்கும் மாணவர்களும், இணைய வழிக் கல்விக்கு வேண்டிய சாதனங்களை வாங்குவதற்குப் பொருளாதார வசதிகள் குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களும் கல்வித் துறையில் பாரிய புறமொதுக்கல்களைச் சந்தித்து வருகின்றார்கள். இவ்வாறான மாணவர்கள் தமது கல்வியினைத் தொடருவதற்கான வசதி வாய்ப்புக்களை அரசு உடனடியாக ஏற்படுத்த வேண்டும்.
ஓர் ஆரோக்கியமான சமூகத்தினைக் கட்டியெழுப்புவதற்கு அவசியமான ஆரம்ப, இடைநிலைக் கல்வியினை வழங்கும் மிகவும் முக்கியமான பொறுப்பினை பாடசாலை சார் ஆசிரியர் சமூகத்தினரும், அதிபர்களும் மேற்கொண்டு வருகின்றனர்.
ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் குறைவான ஊதியம், அவர்கள் சமூகத்துக்கு ஆற்றும் பணிகளின் முக்கியத்துவத்தினையும், அவர்கள் பாடசாலைகளில் மேற்கொள்ளும் சவால்மிக்க பணிகளினையும் அரசு கவனத்திலே எடுக்கவில்லை என்பதனையே காட்டுகிறது.
எமது பல்கலைக்கழகங்கள் உயிர்ப்புடன் இருக்கவும், பல்கலைக்கழகங்களிலே அறிவுபூர்வமான செயற்பாடுகள் இடம்பெறுவதற்கும், சமூகம் ஜனநாயகத்தன்மை மிக்கதாக அமையவும், பாடசாலைகளிலே கற்பிக்கும் ஆசிரியர்கள் இட்டிருக்கும் அடித்தளத்தின் முக்கியத்துவத்தினை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகத்தினராகிய நாம் உணர்ந்தவர்களாக இருக்கிறோம்.
பாடசாலைக் கல்விச் சமூகத்தினர் அரசினை நோக்கி முன்வைத்துள்ள கோரிக்கைகள் நியாயத்தன்மை மிக்கன என்பதனை நாம் வலியுறுத்துகிறோம். அவர்களுடைய போராட்டம் வெற்றிபெற, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகம் பாடசாலைக் கல்விச் சமூகத்துடன் தோழமையுடன் பயணிக்கும் என்பதனை இந்தத் தருணத்திலே நாம் வெளிப்படுத்த விரும்புகிறோம்.
நாட்டில் எதேச்சதிகாரம் தலையெடுத்து, கல்வி, சுகாதாரம், விவசாயம் போன்ற துறைகள் பாரிய நெருக்கடியினை எதிர்கொண்டு வரும் ஒரு சூழலிலே, ஜனநாயகமயமாக்கல் செயன்முறைகளினை முன்கொண்டு செல்லுவதிலும், ஏற்றத் தாழ்வற்ற சமூகத்தினைக் கட்டியெழுப்புவதிலும் நாட்டில் உள்ள தொழிற்சங்கங்களும் மக்கள் அமைப்புக்களும் முக்கியமான பங்களிப்பை ஆற்ற வேண்டும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகத்தினராகிய நாம் கருதுகிறோம்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்ட போது, அது சமூகத்துடன் பிணைந்து பயணிக்கும் ஒரு பல்கலைக்கழகமாகவே தன்னை வடிவமைத்தும், செயற்படுத்தியும் கொண்டது. சமூகத்தில் நிலவும் பொருளாதார, அரசியற் பிரச்சினைகளுக்கு மக்களுடன் சேர்ந்து தீர்வுகளைக் காணும் முயற்சிகளில் பல்கலைக்கழகம் தன்னை ஈடுபடுத்தியது. இந்த மரபின் அடியொற்றிய எமது பார்வையிலே, இன்று கல்வித்துறை குறித்து நாம் மேற்கொண்டு வரும் போராட்டங்கள், நாட்டிலே விவசாயிகள், தொழிலாளர்களினால், பெண்களினால் மேற்கொள்ளப்படும் ஜனநாயகத்துக்கும், சமத்துவத்துக்குமான ஏனைய போராட்டங்களுடன் நெருங்கிய தொடர்புபட்டவை.
இந்த அடிப்படையிலே இன்றைய எமது போராட்டம் தொழிற்சங்கங்களுடனும், பொதுமக்கள் அமைப்புக்களுடனும் புதிய கூட்டணிகளை உருவாக்கும் எனப் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சமூகத்தினராகிய நாம் எதிர்பார்க்கிறோம்.
இன்றைய போராட்டத்திலே எம்முடன் தோழமை உணர்வுடன் பங்கேற்று, எமது கோரிக்கைகளுக்கு வலுச் சேர்த்த அனைத்து ஜனநாயக, முற்போக்குச் சக்திகளுக்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகத்தினர் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகம்