திருகோணமலையில் இன்று முதல் அத்தியாவசிய சேவைகள் அல்லாத கடைகள் மற்றும் வியாபார நிலையங்களை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நகரசபை தலைவர் நா.ராஜனாயகம் தெரிவித்துள்ளார்.
இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் நா.ராஜனாயகம் மேலும் கூறியுள்ளதாவது, “திருகோணமலையில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமையினால் இன்று முதல் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த அனைத்து வியாபார நிலையங்களையும் மூடுவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆனாலும் மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்திசெய்வதற்காக அவர்கள் குடியிருப்பு பகுதியிலுள்ள சிறுகடைகள் திறக்கப்பட்டிருக்கும்.
மேலும் நடமாடும் சேவைகள் ஊடாக மீன் மற்றும் மரக்கறி வகைகளை விநியோகிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.