நாட்டை இரண்டு வாரங்கள் முடக்குவதால் பொருளாதாரம் முழுவதும் சரிவடைந்து விடப்போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்பட்டுள்ள நிலைமைகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது ஹர்ஷ டி சில்வா மேலும் கூறியுள்ளதாவது, “ சுதந்திரத்திற்கு பின்னர் நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
குறுகிய காலத்தில் நாம் பாரிய சவாலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. யதார்த்தத்தை புரிந்து கொள்ளாமல் நிலைமையை மறைப்பதற்காக வேறு செயற்பாடுகளை முன்னெடுப்பதால் மக்களே பாதிக்கப்படுவர்.
மேலும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாட்டின் பொருளாதாரம் ஒரே தடவையில் திடீரென வீழ்ச்சியடையாது.
அத்துடன் அளவுக்கு அதிகமாக நாணயத்தாள்களை தொடர்ச்சியாக அச்சிடுவதால் பணவீக்கம் உயர்வடையும். இதனால் பொருட்களின் விலையும் அதிகரிக்கும். இதிலும் மக்களே பாதிக்கப்படுவர்.
ஆகவே, இந்த விடயங்களில் உலக நாடுகள் எவ்வாறு செயற்படுகின்றன என்பதை அவதானித்து, அதிலிருந்து அனுபவங்களைப் பெற்று மக்களை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.