நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல். ரி-20 தொடரில் விளையாடுவதற்கு இலங்கை வீரர்களான வனிந்து ஹசரங்க மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுவரை ஐ.பி.எல். கிண்ணத்தை ஏந்தாத றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக இவர்கள் இருவரும் விளையாட உள்ளதனை பெங்களூர் அணி நிர்வாகம் உறுதிசெய்துள்ளது.
இதில் வனிந்து ஹசரங்க, அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஆடம் செம்பாவுக்கு மாற்றீடாக விளையாடவுள்ளார்.
சுழற்பந்து வீச்சு சகலதுறை வீரரான வனிந்து ஹசரங்க சமீபகாலமாக பந்து வீச்சில் சிறப்பாக விளையாடி ரி-20 தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
அதேபோல முன்னாள் வேகப்பந்து ஜாம்பவான் சமிந்த வாஸின் பயிற்சியின் கீழ் வேகப்பந்து வீச்சாளரான துஷ்மந்த சமீர சிறப்பாக பந்து வீசி வருகிறார்.
இந்தநிலையில் விராட் கோஹ்லி தலைமையிலான றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக இருவரும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, நடப்பு தொடரில் ஏழு போட்டிகளில் விளையாடி ஐந்தில் வெற்றி இரண்டில் தோல்வி என 10 புள்ளிகளுடன் புள்ளிபட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல். ரி-20 தொடரின் எஞ்சியப் போட்டிகள், எதிர்வரும் செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது.
கொவிட் -19 காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 14ஆவது அத்தியாயம், செப்டம்பர் 19ஆம் திகதி ஆரம்பமாகி ஒக்டோபர் 15ஆம் திகதி முடிவடையவுள்ளது.
நடப்பு தொடர், 29 போட்டிகள் முடிந்த நிலையில் பாதியில் நிறுத்தப்பட்டது. இன்னும் 31 போட்டிகள் நடத்தப்பட வேண்டி உள்ளது.