ஓர் நேர்மையான தேசிய வாதியை மங்கள சமரவீரவின் மறைவினால் இந்த நாடு இழந்து நிற்கின்றது என தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் ந.ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலையில், சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர சிகிச்சைப் பலனின்றி இன்று காலை காலமானார்.
அவரின் மறைவு குறித்து ந.ஸ்ரீகாந்தா வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ள அவர், “அரசியல் நீதி கோரி நிற்கும் தமிழ் மக்களின் அபிலாசைகளை நன்கு உணர்ந்து கொண்டு, தேசிய ஒற்றுமைக்காக உறுதியுடன் செயற்பட்ட மங்கள சமரவீரவின் திடீர் மறைவு துயரமளிக்கின்றது.
ஐம்பதுகளிலும், அறுபதுகளிலும் நன்கறியப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினராகத் திகழ்ந்த தனது தந்தையார் மகாநாம சமரவீரவின் அடிச்சுவட்டை பின்பற்றி, 1989ல் நாடாளுமன்றத்திற்குள் பிரவேசித்த மங்கள சமரவீர, தனது நேர்மையான செயற்பாடுகள் ஊடாக தமிழ் – முஸ்லிம் மக்களின் மதிப்பையும் அபிமானத்தையும் பெற்றுக் கொண்டவர் ஆவார்.
இன மத வேறுபாடுகள் இன்றி இலங்கைத் தீவின் மக்கள் அனைவரினதும் ஜனநாயக உரிமைகளுக்காக அவர் உறுதியுடன் எப்போதும் செயற்பட்டார். அவரின் மறைவினால் துயரமடைந்திருக்கும் அனைவருடனும் நாமும் இணைந்து நிற்கின்றோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.