வடமராட்சி கடற் பிரதேசத்தில் எல்லை தாண்டிய இந்திய மீனவர்களால் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான வலைகளை இழந்து வருவதாக வடமராட்சி பிரதேச மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
பல வருடங்களாக இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி நாளாந்தம் வடமராட்சி கடற்பரப்பில் இழுவை மடி தொழிலில் ஈடுபடுவதால் கடல் வழங்கள் அழிக்கப்படுவதுடன், தங்களின் வலைகளும் நாசாமாகி வருகின்றன என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக கடற்றொழில் அமைச்சரிடம் பல தடவைகள் முறையீடு செய்தும் எந்தவித பயனும் கிடைக்கவில்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கரையிலிருந்து சுமார் மூன்று கடல் மைல் தூரம் வரை இந்திய இழுவைமடி படகுகள் வருவதாகவும் கடற்படையும் பல தடவைகள் அவர்களை வெளியேற்றியும் மீண்டும் மீண்டும் அவர்கள் எல்லை தாண்டிய மீன்பிடியில் இடுபடுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், கடற்றொழில் அமைச்சர் மற்றும் கடற்படை அனுமதியளித்தால் எல்லை தாண்டிய இழுவை மடி படகுகளை தாம் கைப்பற்றி உரிய தரிப்புக்களிடம் ஒப்படைப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.