மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 109 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்ஸில் 110 ஓவா்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 302 ஓட்டங்களை எடுத்து தனது ஆட்டத்தை முடித்துக்கொண்டு மேற்கிந்தியத் தீவுகள் அணியைத் துடுப்பெடுத்தாட அழைத்திருந்தது. தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 51.3 ஓவர்களில் 150 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. போனர் 37 ஓட்டங்களை அதிகபட்சமாக அடித்திருந்தார். பாகிஸ்தான் தரப்பில் ஷாஹீன் ஷா அப்ரிடி 6, மொஹமட் அப்பாஸ் 3 விக்கெட்டுக்களைச் சாய்த்தனர்.
பின்னா் முதல் இன்னிங்ஸில் 152 ரன்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான், 27.2 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ஓட்டங்களை எடுத்து தனது இன்னிங்ஸினை முடித்துக்கொண்டது. இம்ரான் பட் 37 ஓட்டங்கள் சேர்த்தார். மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ஜேசன் ஹோல்டர், அல்ஸாரி ஜோசஃப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்னா் 329 ரன்களை இலக்காகக் கொண்டு தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த மேற்கிந்தியத் தீவுகள் அணி 219 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து தோல்வியைச் சந்தித்தது. ஜேசன் ஹோல்டர் அதிகபட்சமாக 47 ஓட்டங்களை எடுத்தார். பாகிஸ்தான் அணியின் அப்ரிடி அபாரமாகப் பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்தப் போட்டியில் மொத்தமாகப் பத்து விக்கெட்டுகளை வீழ்த்திய அவரே இந்தப் போட்டியினதும் தொடரினதும் ஆட்டநாயகனாகவும் தெரிவானார்.
முதல் டெஸ்ட் போட்டியை மேற்கிந்தியத் தீவுகள் அணி வென்றிருந்த நிலையில், இரண்டாவது போட்டியில் வெற்றிபெற்று பாகிஸ்தான் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என்று சமநிலைப்படுத்தியுள்ளது.