மாகாண சபை தேர்தலுக்கான சட்டத்தை தயார்படுத்தும் நடவடிக்கையை முன்னெடுக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
தற்போது நிலவும் கொரோனா தொற்று சூழ்நிலையில் தேர்தலை நடத்துவது கடினம் என்ற நிலையில் நிலைமை கட்டுப்படிருக்கும் வந்ததும் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடாக இதனை மேற்கொள்ளுமாறு அவர் தெரிவித்துள்ளார்.
2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலுக்கு முன்னரே தேர்தல் முறைமை குறித்து பேச்சுக்கள் தொடங்கப்பட்டபோதும் அதற்கு பின்னர் இரு தேர்தல்கள் இடம்பெற்றமையை எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறு மாகாண சபை தேர்தலையும் நடத்த வேண்டும் என வலியுறுத்திய அவர், தேர்தல் சீர்திருத்தம் என்ற பெயரில் மாகாண சபை தேர்தலை இழுத்தடிப்பது உகந்த விடயமல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே மாகாண சபை தேர்தல் சட்டங்களை மீண்டும் கொண்டுவருவதற்கு தன்னால் முன்வைக்கப்பட்ட இரண்டு மார்க்கங்களில் ஒன்றின் ஊடாக மாகாணசபை தேர்தலை நடத்த முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.