இலங்கையின் தடுப்பூசி திட்டம் தாமதமாகத் தொடங்கப்பட்டதால் மூன்றாவது தடுப்பூசியை செலுத்துவதில் சிக்கல் ஏற்படலாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், இருப்பினும் இலங்கை அரசாங்கம் தற்போது சிறந்த முறையில் அத்திட்டத்தை முன்னெடுத்து செல்வதாக பாராட்டு தெரிவித்தார்.
மேலும் எவ்வித உதவிகளும் இன்றி அமெரிக்கா மற்றும் இத்தாலி போன்ற சில நாடுகளினால் தொற்றைக் கட்டுப்படுத்த முடிந்தது என்றும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
எவ்வாறாயினும், அமெரிக்கா மற்றும் இத்தாலியுடன் ஒப்பிடுகையில் மக்கள் தொகை குறைவாக கொண்ட இலங்கையில் இந்த திட்டம் விரைவுபடுத்தப்படவில்லை என்றும் கூறினார்.
தாமதமான தடுப்பூசித் திட்டம் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு தடையாக இருக்கலாம் என சரத் பொன்சேகா சுட்டிக்காட்டினார்.
ஆகவே மூன்றாவது தடுப்பூசி செலுத்துவதற்கு முன்னர் பல நோயாளிகள் மற்றும் இறப்புகள் பதிவாக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.