ஈஸ்டர் தாக்குதல் குறித்த அறிக்கையால் தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து பொலிஸ் உயரதிகாரிகள் அண்மையில் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை சந்தித்தமையில் எவ்வித தவறும் இல்லை என பொது பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
மதத் தலைவர்களைச் சந்தித்து தங்களின் குறைகளை எவராலும் தெரிவிக்க முடியும் எனவே இந்த விடயத்தை ஒரு பிரச்சினையாகப் பார்க்கப்படக் கூடாது என பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், ஜகத் அல்விஸ் கூறியுள்ளார்.
மேல் மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன், நந்தன முனசிங்க உள்ளிட்ட சில உயர்மட்ட பொலிஸார் அண்மையில் அஸ்கிரிய மகாநாயக்க தேரரை சந்தித்து ஈஸ்டர் தாக்குதல் பற்றி பரபரப்பு விடயங்களைப் பேசியிருந்தனர்.
குறிப்பாக பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையின் மூலம் சில பொலிஸ் அதிகாரிகளுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக இதன்போது சுட்டிக்காட்டிருந்தனர்.
இந்நிலையில் அண்மையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய தேசபந்து தென்னகோன், கிடைத்த புலனாய்வுப் பிரிவின் தகவல் குறித்து அப்போதைய அரசாங்கமோ அல்லது பாதுகாப்பு அமைச்சோ பொலிஸாருக்கு தெளிவான அறிவுறுத்தல்களை வழங்கவில்லை என கூறியிருந்தார்.
இவ்வாறு அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை அண்மையில் சந்தித்த பொலிஸ் உயரதிகாரிகள் ஈஸ்டர் தாக்குதல் பற்றி கருத்து வெளியிட்டமை குறித்து விசாரணைகளை நடத்தும்படி கத்தோலிக்க திருச்சபை சபை வலியுறுத்தியுள்ளது.
குறிப்பாக ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டால், அவர்கள் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டும், பின்னர் அவர்கள் மீது பிழை இல்லை எனில் சட்டத்தின் முன் அதை நிரூபிக்க முடியும். இத்தகைய சூழ்நிலையில், பொலிஸ் அதிகாரிகள் மதத் தலைவர்களிடம் சென்று அவர்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பிக்க முயற்சிப்பது ஏற்புடையதல்ல என்றும் கத்தோலிக்க திருச்சபை சபை கூறியுள்ளது.
மேலும் பயங்கரவாத தாக்குதல்கள் குறித்து முறையாக விசாரணைகளை நடத்துவதற்கு பதிலாக, முரண்பட்ட கருத்துக்களை பொலிஸ் அதிகாரிகள் வெளியிடுவதானது இன மோதலை உருவாக்க காரணமாக அமைந்துவிடும் என்றும் அருட்தந்தை சிரில் காமினி பெர்னாண்டோ கூறினார்.
எனவே இனங்களுக்கு இடையில் மோதலை ஏற்படுத்தும் வகையில் தெரிவித்த கருத்துக்களுக்கு கண்டனம் வெளியிட்ட அருட்தந்தை சிரில் காமினி பெர்னாண்டோ, எந்தவொரு அரசியல் தலையீடும் இல்லாமல் நீயாயமான முறையில் விசாரணைகளை நடத்துமாறும் கேட்டுக்கொண்டார்.