அமெரிக்க துருப்புகள் வெளியேறுவதற்கான காலக்கெடு திகதியான எதிர்வரும் செப்டம்பர் 31ஆம் திகதிக்குப் பிறகு தலிபான்கள் ஆப்கான் எல்லைகளை மூடினால், அது மிகப் பெரிய அகதிகள் நெருக்கடியை ஏற்படுத்தும் என பிரித்தானியா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியுறவு அமைச்சர் டொமினிக் ராப் கூறுகையில், ‘ஆப்கானிஸ்தானிலிருந்து மேற்கத்திய நாடுகளின் படைகள் வெளியேறுவதற்கான காலக்கெடு திகதியான எதிர்வரும் செப்டம்பர் 31ஆம் திகதிக்குப் பிறகு, நாட்டின் எல்லைகளை தலிபான்கள் மூட முயற்சிக்கலாம்.
ஆப்கானின் எல்லைப் பகுதிகள் சீரற்றதாகவும் மிகவும் நீளமாகவும் உள்ளது. எனவே, அந்த நாட்டை வெளியுலகிலிருந்து துண்டிக்கும் அந்த முயற்சி தோல்வியடையும்.
எனவே, நாட்டிலிருந்து வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சமடைய ஏராளமானவர்கள் முயல்வார்கள். இது, மிகப் பெரிய அகதிகள் நெருக்கடியை ஏற்படுத்தும்’ என கூறினார்.
முன்னதாக பிரித்தானிய குடிமக்கள் மற்றும் தகுதியான ஆப்கானிஸ்தானியர்களை வெளியேற்றுவதற்கு தங்களது அரசாங்கம் கடைசித் தருணம் வரை பயன்படுத்தும் என்று டொமினிக் ராப் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக காபூல் விமான நிலையத்தை விட்டுத் தள்ளிச் செல்லுமாறும், பயணம் செய்ய வேண்டாம் என தங்களது குடிமக்களுக்கு அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய நாடுகள் வலியுறுத்தியுள்ளன.