ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தலிபான்களுடன் சீனா முதல்முறையாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் கூறுகையில், ‘தலிபான்களுடன் முதல்முறையாக தூதரகத் தொடர்பை ஏற்படுத்தியுள்ளோம். அவர்களுடன் எந்தவித தடையுமில்லாமல் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.
இரு தரப்பிலும் தகவல்களும் ஆலோசனைகளும் பரிமாறிக்கொள்ளப்பட்டு வருகின்றன. முக்கியமான விவகாரங்களில் இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு காபூல் நகரம் முக்கிய தளமாகத் திகழ்கிறது.
ஆப்கான் மக்களின் உணர்வுகளையும் சுதந்திரத்தையும் சீனா மதிக்கிறது. அந்த நாட்டின் எதிர்காலம் குறித்து அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்பதில் சீனா உறுதியுடன் உள்ளது’ என கூறினார்.
ஆப்கனுக்கு 20 ஆண்டுகளாக அமெரிக்கா நிதியுதவி அளித்து வந்தது. தற்போது தலிபான்கள் கட்டுப்பாட்டில் அந்நாடு வந்துள்ளதையடுத்து, நிதியுதவிக்காக தலிபான்கள் சீனாவையும், பாகிஸ்தானையும் அணுகக்கூடும் என ஆப்கான் மத்திய வங்கித் தலைவர் தெரிவித்திருந்ததற்கு மத்தியில் இந்த பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஆப்கானிஸ்தானை மீண்டும் கைப்பற்றியுள்ள தலிபான்கள், சீனாவில் உய்கர் இன முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஜின்ஜியாங் மாகாணத்தைச் சேர்ந்த பிரிவினைவாத அமைப்பினருக்கு அடைக்கலம் அளிக்கலாம் என சீனா அச்சம் கொண்டிருந்த நிலையில், இதனை தலிபான்கள் மறுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.