கடந்த 24 மணி நேரத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிதாக 209 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.
மேலும் மாவட்டத்தில் கொரோனா மரணங்கள் 201ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே நாகலிங்கம் மயூரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “மட்டக்களப்பு மாவட்டத்தில் சராசரியாக நாளொன்றுக்கு 300 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதுடன் 5மரணங்களும் பதிவாகின்றன.
கடந்த மாதத்தில், மாவட்டத்தில் 2400 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டபோதிலும் கடந்த வாரத்தில் மட்டும் 2093கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 32பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பொதுமக்கள் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தினை மீறி அதிகளவு நடமாடுகின்றனர்.
இந்த செயற்பாடு, மாவட்டத்தினை இன்னும் பாதக நிலைமைக்கு கொண்டுசெல்லும்” என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.