இலஞ்ச ஊழல் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் ஏப்ரல் 02 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இலஞ்சம் அல்லது ஊழல் புகார்களை விசாரிக்கும் ஆணைக்குழுவின் (CIABOC) அதிகாரிகள் மற்றும் சந்தேக நபரின் சட்டப் பிரதிநிதிகள் அளித்த வாதங்களைக் கருத்தில் கொண்ட பின்னர், பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
அதன்படி, ஏர்பஸ் விமான ஒப்பந்தம் தொடர்பாக 2 மில்லியன் அமெரிக்க டாலர் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் மார்ச் மாதம் 12ம் திகதி கைது செய்யப்பட்டார்.
2013 ஆம் ஆண்டில் 2.3 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள 10 விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தின் போது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக இருந்த சந்திரசேன, 16 மில்லியன் அமெரிக்க டாலர் இலஞ்சம் பெற சதி செய்ததாகவும், சிங்கப்பூரில் உள்ள ஒரு வங்கிக் கணக்கில் 1.45 மில்லியன் யூரோ பெற்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
சந்திரசேன தனது மனைவியின் பெயரில் புருனேயில் ஒரு போலி நிறுவனத்தை உருவாக்கி, அந்த நிறுவனத்தின் சிங்கப்பூர் கணக்கில் கையூட்டு செலுத்த ஏற்பாடு செய்ததாக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடதக்கது.















