கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரதேசத்தில், முதலாம் தடுப்பூசியை பெற்றுக்கொண்ட மக்களுக்கு இரண்டாம் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியுள்ளது.
குறித்த வேலைத்திட்டம், பல்வேறு தடுப்பூசி வழங்கும் நிலையங்களில் ஆரம்பமாகியுள்ளது.
அந்தவகையில், நற்பிட்டிமுனை அல் அக்ஸா பாடசாலையில் நிறுவப்பட்டுள்ள தடுப்பூசி வழங்கும் நிலையத்தில், மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசிகளை பெற்று வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இந்த செயற்றிட்டமானது கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் ஏற்பாட்டில், பல கட்டங்களாக நடைபெற உள்ளதாக கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி ஏ.ஆர்.எம்.அஸ்மி தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்திய அதிகாரி ஏ.ஆர்.எம்.அஸ்மி மேலும் கூறியுள்ளதாவது, “இந்த இரண்டாம் தடுப்பூசிகள் முதல் கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்ட கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசிகள் திங்கட்கிழமை முதல் வியாழக்கிழமை வரை வழங்கப்படவுள்ளது.
அந்தவகையில் இன்றைய நாளான திங்கட்கிழமை காலை 8 மணிமுதல் பகல் 1 மணி வரை எமது கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பகுதியில் அமைந்துள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திலும் தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
மேலும் நாட்டில்,கொரோனா தொற்றாளர்களை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை, பாதுகாப்பு துறை அடங்களாக பல்வேறு தரப்பினரும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வருகின்றனர்.
ஆகவே, பொதுமக்கள் இந்த பெருந்தொற்றை கட்டுப்படுத்த பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.