அவசரகால சட்டம் மக்களின் குரல் வளையை நசுக்குகின்ற ஒரு சட்டமாக இருக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குற்றம் சுமத்தியுள்ளார்.
இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் செல்வம் அடைக்கலநாதன் மேலும் கூறியுள்ளதாவது, ஜனாதிபதி அவசரகால சட்டத்தை கொரோனா தொற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கைக்கு பயன்படுத்துவதாக காட்டிக்கொண்டு சட்டத்தை கையில் எடுத்துள்ளார்.
மேலும், இராணுவத்தினருடைய அதிகாரங்களை இராணுவத்திற்கு வழங்கி, ஜனநாயக ரீதியான போராட்டங்களில் ஈடுபடுகின்றவர்களை கைது செய்வதற்கான ஒரு அத்திவாரமாக இந்த சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
ஜனநாயக நாடு என கூறிக் கொண்டு ஒரு சர்வாதிகார ஆட்சியை நடத்துவதற்கான அத்திவாரத்தை இந்த சட்டத்தின் ஊடாக ஜனாதிபதி ஏற்படுத்தியுள்ளார்.
அண்மையில் இந்த சட்டத்தின் ஊடாக ஓய்வு பெற்ற இராணுவ தளபதியை குறித்த குழுவிற்கு ஜனாதிபதி நியமித்துள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தை பார்க்கிலும் அவசரகால சட்டம் அன்றாடம் குரல் கொடுக்கின்ற எமது மக்களின் குரல் வளையை நசுக்குகின்ற ஒரு சட்டமாக அமைந்துள்ளது.
எனவே, மக்களை பாதிப்புக்கு உள்ளாக்குகின்ற அவசர காலச்சட்டம் உடனடியாக நீக்கப்பட வேண்டும். ஜனநாயக நாட்டில் மக்கள் சுதந்திரமாக செயற்பட வழி முறைகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.