நல்லூர் முருகன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர் உற்சவம், ஆலய உள்வீதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெறுகின்றது.
இந்நிலையில், நல்லூர் ஆலய தேர் உற்சவத்தினை தரிசிக்க, அடியவர்கள் ஆலயத்திற்கு வருவதை தடுக்கும் முகமாக, நல்லூர் ஆலய வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட பொலிஸார், ஆலய வளாகத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.
மேலும், ஆலய உற்சவத்தின்போது அமைக்கப்படும் வீதித் தடைகளை தாண்டி யாரும் உட் செல்ல அனுமதிக்கப்படவில்லை என்பதுடன் ஆலயத்திற்கு முன்பாக பொலிஸாரின் பேருந்து வண்டி ஒன்று வீதிக்கு குறுக்காக நிறுத்தப்பட்டுள்ளதோடு நல்லூர் ஆலய வளாகத்திற்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தலான சூழ்நிலையில் மக்கள் நல்லூர் ஆலய தேர் உற்சவத்தினை தரிசிக்க ஒன்றுக் கூடினால் மேலும் வைரஸ் தொற்று அதிகரிக்கலாம் என்ற அச்சத்திலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.