இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில், தென்னாபிரிக்க அணி டக்வெத் லூயிஸ் முறையில் 67 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என சமநிலைப்படுத்தியது.
இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையில் இடம்பெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 14 ஓட்டங்களால் வெற்றிபெற்று தொடரில் 1-0 என முன்னிலை பெற்றிருந்தது.
இதையடுத்து இரு அணிகளுக்குமிடையிலான 2 ஆவது ஒருநாள் போட்டி கொழும்பு. ஆர் பிரேமதாஸ மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதற்கமைய மழை குறுக்கிட்டதால், மட்டுப்படுத்தப்பட்ட 47 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்புக்கு தென்னாபிரிக்க அணி 283 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
தென்னாபிரிக்க அணி சார்பில் மாலன் 9 பவுண்டரிகள் ஒரு சிக்ஸர் அடங்கலாக 121 ஓட்டங்களை அதிகபடியாக பெற்றுக்கொடுத்தார்.
பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் துஷ்மந்த சாமீர மற்றும் சாமிக்க கருணாரத்ன ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனைத்தொடர்ந்து 47 ஓவர்களில் 284 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இலங்கை அணி, 25 ஓவர்களுக்கு 114 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில் மீண்டும் மழை குறுக்கிட்டது.
இதன் பின்னர் டக்வெத் லூயிஸ் முறையில் போட்டி 41 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டு இலங்கை அணியின் வெற்றியிலக்கு 265 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டது.
இந்த நிலையில், மழை ஓய்ந்த பின்னர் மீண்டும் துடுப்பாட்டத்தை தொடர்ந்த இலங்கை அணி, 36.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 197 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 67 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் அதிகபடியாக சரித் அசலன்க 5 பவுண்டரிகள் 3 சிக்ஸர்கள் அடங்கலாக 77 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
பந்துவீச்சில் தென்னாபிரிக்க அணியின் டப்ரைஸ் ஷம்ஸி 5 விக்கெட்டுக்களை கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.