சுதந்திர நாடாக இந்தியா விளையாடிய முதல் டெஸ்ட் தொடரின் போது அவுஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் சர் டொனால்ட் பிராட்மேன் அணிந்திருந்த அரிய பேக்கி பச்சை நிற தொப்பி குயின்ஸ்லாந்தில் நடந்த ஏலத்தில் 460,000 அவுஸ்திரேலிய டொலர்களுக்கு (சுமார் 320,000 அமெரிக்க டொலர்கள்) ஏலம் போயுள்ளது.
1947-48 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான உள்நாட்டுத் தொடரைச் சேர்ந்த இந்த சின்னமான தொப்பி, லோயிட்ஸ் ஏலத்தால் நடத்தப்பட்ட கோல்ட் கோஸ்ட் ஏலத்தில் ஒரு பெயர் குறிப்பிடாத வாங்குபவரால் வாங்கப்பட்டது.
1947-48ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடிய இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட தொடரை 4-0 என இழந்தது.
அந்த தொடரின்போது அப்போதைய இந்திய அணியில் இடம்பிடித்திருந்த இந்திய வீரர் ஸ்ரீரங்கா வாசுதேவ் சோஹோனிக்கு தன்னுடைய பச்சை நிறத் தொப்பியை பரிசாக கொடுத்திருந்தார் டான் பிராட்மேன்.
அவருடைய குடும்பத்தினர் அதை கடந்த 75 ஆண்டுகளாகப் பாதுகாத்து வந்தனர்.
ஐந்து போட்டிகள் கொண்ட அந்த டெஸ்ட் தொடரை இந்தியா 4-0 என்ற கணக்கில் இழந்த போதிலும், இது ஒரு இறையாண்மை கொண்ட நாடாக சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவின் பயணத்தின் தொடக்கத்தைக் குறித்தது.
வரலாற்றில் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரராக பரவலாகக் கருதப்படும் பிராட்மேன், 52 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 6,996 ஓட்டங்களை சேர்த்து தனது சராசரியை 99.94 என வைத்துள்ளார்.
இவரின் 21 ஆண்டு கிரிக்கெட் வரலாற்றில் 29 சதங்களை விளாசியியுள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் டான் பிராட்மேன் வைத்துள்ள சராசரியை இதுவரை எந்தநாட்டு வீரர்களாலும் முறியடிக்கவில்லை.
பிராட்மேனின் நினைவுப் பொருட்கள் தொடர்ந்து மகத்தான மதிப்புடையவை. 1928 ஆம் ஆண்டு அவர் அறிமுகமான போட்டியில் அணிந்திருந்த தொப்பி 2020 ஆம் ஆண்டில் 450,000 அவுஸ்திரேலிய டொலர்களுக்கு விற்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.














