பிரித்தானியாவில் இருந்து அகதிகளை ருவாண்டாவிற்கு அனுப்பும் திட்டத்தை தற்போதைய பிரதமர் கீர் ஸ்டார்மர் ரத்து செய்துள்ள நிலையில், அதற்கான நிலுவைத் தொகையைக் கோரி பிரித்தானியா மீது ருவாண்டா அரசு சட்டப்படியான நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.
பிரித்தானியாவின் முந்தைய கன்சர்வேட்டிவ் அரசு, ஆங்கில கால்வாய் வழியாகச் சட்டவிரோதமாகப் படகுகளில் வரும் அகதிகளை ருவாண்டாவிற்கு அனுப்ப ஒரு ஒப்பந்தம் செய்திருந்தது.
இதற்காக ருவாண்டாவிற்குப் பெரும் நிதி வழங்க ஒப்புக்கொள்ளப்பட்டது.
2024 ஆம் ஆண்டில் பொதுத்தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் கீர் ஸ்டார்மர் தலைமையிலான தொழிலாளர் கட்சி, இந்தத் திட்டம் “காலாவதியான ஒன்று” என்று கூறி அதனை அதிரடியாக ரத்து செய்தது.
இந்த திட்டத்திற்காக ஏற்கனவே பிரித்தானியா சுமார் 700 மில்லியன் பவுண்ட்ஸ் செலவிட்டுள்ளது.
இதில் ருவாண்டாவிற்கு மட்டும் 290 மில்லியன் பவுண்டஸ் வழங்கப்பட்டுள்ளது. ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதால், வருங்காலத்தில் வழங்க வேண்டிய 220 மில்லியன் பவுண்டஸ் தொகையைத் தர முடியாது எனப் பிரித்தானிய உள்துறை அமைச்சு தெரிவித்தது.
எனினும் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டபடி பிரித்தானியா தனது கடமைகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாகக் கூறி, நெதர்லாந்தைத் தலைமையிடமாகக் கொண்ட நிரந்தர நீதாய நீதிமன்றத்தில் (Permanent Court of Arbitration) ருவாண்டா வழக்குத் தொடர்ந்துள்ளது.
ஒப்பந்தத்தின் கீழ் தங்களுக்கு வர வேண்டிய எஞ்சிய தொகையைத் திரும்பப் பெறவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ருவாண்டா அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் ருவாண்டா அரசின் இந்தச் சட்டப் போராட்டத்தை வலுவாக எதிர்கொள்ளப் போவதாகப் பிரித்தானிய உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. “முந்தைய அரசின் இந்தத் திட்டம் வரி செலுத்தும் மக்களின் பணத்தையும் காலத்தையும் வீணடித்துவிட்டது.
மக்களின் வரிப்பணத்தைப் பாதுகாக்க எங்களது நிலப்பாட்டை நீதிமன்றத்தில் வலுவாக வாதிடுவோம்” என்று பிரித்தானிய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















