கொரோனா கட்டுப்படுத்தல் நடவடிக்கை மற்றும் அரசாங்கத்தின் ஏனைய செலவுகளுக்கு என 73.2 பில்லியன் ரூபாயிற்கான குறைநிரப்பு பிரேரணை நாடாளுமன்றில் நேற்று (திங்கட்கிழமை) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
நேற்று காலை சபை நடவடிக்கைகள் இடம்பெற்றபோது ஆளும் கட்சி பிரதம கொறடாவும் அமைச்சருமான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ 732,124,887,226 ரூபாய்க்கான குறைநிரப்பு பிரேரணை நாடாளுமன்றில் முன்வைத்தார்.
குறைநிரப்பு பிரேரணை மூலம் வடக்கு மற்றும் கிழக்கு உட்பட 24 மாவட்டங்களிலும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு செலவழிக்க அரசாங்கம் சபையின் ஒப்புதலை கோரியுள்ளது.
தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கும் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு மேலதிக நிதியை செலவிடவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கவும் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையை மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை வரை நீடிப்பதற்கான கடன்களை தீர்க்க 8.04 பில்லியன் மற்றும் சூரியவெவ சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு 26 மில்லியன் செலவிடவும் சபையின் ஒப்புதலை கோரியுள்ளது.
தென்னை, கித்துல் மற்றும் செய்கை மேம்பாடு மற்றும் அவை சார்ந்த கைத்தொழில் பண்டங்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சின் கட்டிடத்தை மேம்படுத்த 8.8 மில்லியன் ரூபாயை செலவழிக்க அரசாங்கம் சபையின் ஒப்புதலையும் கோரியது.