கடந்த நல்லாட்சி காலத்தில் மலையகத்தில் 52 ஆயிரம் பேருக்கு குடும்ப கட்டுப்பாடு செய்யப்பட்டுள்ளதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்துள்ளார்.
மேலும், மலையக மக்களுக்கு பாதகம் ஏற்படுத்தக்கூடிய பல விடயங்கள் நல்லாட்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் மருதபாண்டி ராமேஷ்வரன் மேலும் கூறியுள்ளதாவது, “நல்லாட்சியின்போது 52 ஆயிரம் பேருக்கு, குடும்ப கட்டுப்பாடு செய்யப்பட்டுள்ளது என ஊடகவியலாளர்களாகிய நீங்களே குறிப்பிடுகின்றீர்கள்.
அந்தவகையில் கடந்த நல்லாட்சியில் மலையக அமைச்சர்களும் இருந்தனர். அப்போது ஏன் இது பற்றி கேள்வி எழுப்படவில்லை.
இந்த விடயம் மாத்திரமல்ல, மலையக மக்களுக்கு பாதகம் ஏற்படக்கூடிய பல விடயங்கள் நல்லாட்சியின்போது செய்யப்பட்டுள்ளன. காணிகள் கூட பறிபோயுள்ளன.
இதேவேளை மலையக மக்கள்மீது அதிக பொறுப்பு காங்கிரசுக்கு இருக்கின்றது. மக்களுக்கு பிரச்சினை என்றால் விரைந்து செயற்படுவோம். உதவி செய்துவிட்டு அதனை ஊடகங்களில் பிரச்சாரம் செய்யமாட்டோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.