காணி அபகரிப்பு குறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் குறிப்பிடாமை மனவருத்தத்தைத் தருவதாக யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
எனவே, அடுத்த மார்ச் மாதக் கூட்டத்திற்கு முன்னர் இவை பற்றிய முழு விபரங்களை சேகரித்து அனுப்ப வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்செல் பச்லெட் வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் தெரிவித்துள்ள அவர், “தமிழ் மக்கள் முகம் கொடுக்கும் பல விடயங்கள் பற்றி அவர் குறிப்பிடவில்லை என்பது மனவருத்தத்தைத் தருகின்றது.
உதாரணத்திற்கு எமது காணிகளை அரசாங்கம் தந்திரமாகவும் பலாத்காரமாகவும் கையேற்றல் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஒரு வேளை பல உண்மையான தரவுகளை விபரமாக அவர் எதிர்பார்த்திருக்கின்றாரோ நான் அறியேன். அடுத்த மார்ச் மாதக் கூட்டத்திற்கு முன்னர் இவை பற்றி முழு விபரங்களை நாம் சேகரித்து அனுப்ப வேண்டும்.
எனினும் பல முக்கிய விடயங்களை அவர் தமது உரையில் குறிப்பிட்டுள்ளார். முதலாவதாக மக்களை வேவு பார்ப்பது அவர்களை அச்சுறுத்துவது மற்றும் மனித உரிமை மீறல் செயற்பாட்டாளர்களை, பத்திரிகையாளர்களை, காணாமல்போனோரின் குடும்ப உறுப்பினரைக் குறிவைத்து அவர்களை நீதிமன்றில் நிறுத்துவது போன்ற செயற்பாடுகள் தற்போது விரிவடைந்து மாணவர்களை, கல்வியாளர்களை, மருத்துவர்களை ஏன் மதத் தலைவர்களையும் அரசாங்கம் கண்காணிக்கத் தொடங்கியுள்ளது என்பதைக் கூறியுள்ளார்.
இரண்டாவதாக நல்லிணக்கம், பொறுப்புக் கூறல், மனித உரிமைகள் ப்றிப் பேசினால் போதாது நடைமுறையில் முன்னேற்றத்தைக் காட்ட வேண்டும் என்றுள்ளார்.
மூன்றாவதாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் ஏற்பாடுகளை உடனே தற்காலிகமாகவேனும் செயலிழக்க வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
நான்காவதாக 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் தினத்தன்று நடந்த குற்றங்கள் சம்பந்தமான சூத்திரதாரிகளை உடனே கண்டுபிடித்து உண்மையையும் நீதியையும் நிலைநாட்ட வேண்டும் என்றுள்ளார். இப்படி பல விடயங்களை அரசாங்கம் செய்ய வேண்டும் என்று பொருள்படக் கூறியுள்ளார்.
மேலும் அரசாங்கத்திற்கு சார்பாகவும் பேசி தொடர்ந்து பொறுப்புக்கூறல் விடயத்தில் அவசியமான செயற்பாடுகளை அரசாங்கம் எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் பொறுப்புக்கூறல் சம்பந்தமான விசாரணைகளை உடனே நடத்த உரிய குழுவை அமைப்பதாகவும் அதற்கான நிதிகளை அங்கத்துவ நாடுகள் பெற்றுத்தரவேண்டும் என்றும் கூறியுள்ளார்.
மொத்தத்தில் நாம் எதிர்பார்த்த பல விடயங்கள் கூறப்படாமல் விட்டாலும் தற்போதைக்கு இலங்கை அரசாங்கத்தை சர்வதேச கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளார்.
அரசாங்கமும் வேறு வழியின்றி அதற்கு இசைந்துள்ளது. பணம் தான் பிரச்சினை. அத்துடன் நாம் நடப்பவை பற்றிய உண்மை விபரங்களை பட்டியலிட்டு அவருக்கு அனுப்பக் கடமைப்பட்டுள்ளோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.