கரீபியன் பிரீமியர் லீக் ரி-20 தொடரின் ஒன்பதாவது அத்தியாயத்தில், சென்.கிட்ஸ்- நெவிஸ் பெட்ரியோட்ஸ் அணி முதல்முறையாக சம்பியன் பட்டம் வென்றுள்ளது.
சென்.கிட்ஸ் மைதானத்தில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற மகுடத்திற்கான இறுதிப் போட்டியில், சென்.கிட்ஸ்- நெவிஸ் பெட்ரியோட்ஸ் அணியும் செயின்ட் லுசியா கிங்ஸ் அணியும் மோதின.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற செயின்ட் லுசியா கிங்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய செயின்ட் லுசியா கிங்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, கோர்ன்வோல் மற்றும் ரொஸ்டன் சேஸ் ஆகியோர் தலா 43 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.
சென்.கிட்ஸ்- நெவிஸ் பெட்ரியோட்ஸ் அணியின் பந்துவீச்சில், பவாட் அஹமட் மற்றும் நசிம் ஷா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் பெபியன் அலென், டோமினிக் ட்ரேக்ஸ் மற்றும் ஜோன்-ரஸ் ஜகேசர் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 160 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய சென்.கிட்ஸ்- நெவிஸ் பெட்ரியோட்ஸ் அணி, 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது.
இதனால் சென்.கிட்ஸ்- நெவிஸ் பெட்ரியோட்ஸ் அணி, 3 விக்கெட்டுகளால் வெற்றிபெற்று முதல் சம்பியன் கிண்ணத்தை வென்றது.
சென்.கிட்ஸ்- நெவிஸ் பெட்ரியோட்ஸ் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, டோமினிக் ட்ரேக்ஸ் ஆட்டமிழக்காது 48 ஓட்டங்களையும் ஜோசுவா டி சில்வா 37 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
செயின்ட் லுசியா கிங்ஸ் அணியின் பந்துவீச்சில், வஹாப் ரியாஸ் 2 விக்கெட்டுகளையும் ரொஸ்டன் சேஸ், அல்சார்ரி ஜோசப், டேவிட் வெய்ஸ் மற்றும் கெஸ்ரிக் வில்லியம்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக 1 விக்கெட்டினையும் ஆட்டமிழக்காது 48 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்ட டோமினிக் ட்ரேக்ஸ் தெரிவுசெய்யப்பட்டார். தொடரின் நாயகனாக செயின்ட் லுசியா கிங்ஸ் அணியின் ரொஸ்டன் சேஸ் தெரிவுசெய்யப்பட்டார்.